Wed. Dec 7th, 2022

சி.அ.யோதிலிங்கம்

அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் அவ்வப்போது இடம் பெறுவதுண்டு. இலங்கை அரசியலிலும் எதிர்பாராத மாற்றம் கடந்த சில தினங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார். மக்களினால் நேரடியாக தெரிவுசெய்யப்படாத தேசியப்பட்டியல் உறுப்பினர், கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டமையை உலக அதிசயங்களில் ஒன்று எனலாம்.

மூளையால் மட்டும் அரசியல் செய்பவர், மூலோபாயங்களை விட தந்திரோபாயங்களில் அதிக அக்கறை செலுத்துபவர் என்பன அவரது மரபு ரீதியான இயல்புகள். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மருமகன் என்பதை மீண்டும் ஒரு தடவை மெய்ப்பித்திருக்கின்றார்.

சில அரசியல்வாதிகளை முழுமையாக வெட்டிச்சாய்த்தாலும் மீள மீள எழுச்சியடைவர். மறைந்த கருணாநிதி, மஹிந்த என்போரையும் இப்பட்டியலில் சேர்க்கலாம்.

ரணிலும் அவர்களில் ஒருவர். ஆனால் ரணிலும், கருணாநிதியும் இலகுவில் நெருக்கடிகளுக்குள் அகப்படுவதில்லை.

ரணிலின் பதவியேற்பு அண்மைக்காலமாக நிலவிவந்த அரசியல் சூழலை முழுமையாக மாற்றுவதாகவும் இருக்கலாம். சில வாரங்களில் அப்போக்கு துலக்கமாகத் தெரியத்தொடங்கும்.

அதிதீவிரவாதம் குறுகிய காலத்திற்குள்ளேயே முதலில் சீர்திருத்தச் செயற்பாட்டிற்குள் தள்ளும். பின்னர் எதிரிக்கு சேவகம் செய்வதாக நிலைமைகளை மாற்றும். காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கும் இது நேர்ந்துள்ளதா?

ரணில் பிரதமராக முடி சூடுவதற்கு பல காரணிகள் தொழிற்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது ராஜபக்~க்கள் தற்காப்பு நிலையை எடுக்க முயற்சித்தமையாகும்.

மஹிந்தவின் முற்கோபம் அனைத்து ராஜபக்~க்களையும் அவர்களைச்சார்ந்தோரையும் தற்காப்பு நிலைக்கு தள்ளியுள்ளது. மா சேதுங்கின் ஈரடி முன்னால் ஓரடி பின்னால் என்ற நிலையை ராஜபக்~க்கள் காலம் தாழ்த்தியாவது எடுத்துள்ளனர். 

யுத்தவாத நாயகர்கள் கடற்படை முகாமிற்குள் ஒளிந்திருக்க வேண்டிய நிலை வந்ததன் பின்னர் தான் அவர்களுக்கு ஞானம் பிறந்திருக்கின்றது.

போர்க்குற்றம், உயிர்த்த ஞாயிறு நிகழ்வை அரசியலுக்கு பயன்படுத்திய குற்றம், காலி முகத்திடல் அடாவடித்தனக் குற்றம், ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்று நான்கு வகைக் குற்றங்களுக்குள் அவர்கள் மாட்டுப்பட்டுள்ளனர்.

வெறுமனே சட்டப்பிரச்சினை என்றால் இவர்கள் புகுந்து விளையாடியிருப்பர், மாறாக சிங்கள மக்களின் கூட்டுக் கோபம் அவர்களை நோக்கி சரிந்தமையால் கடற்படை முகாமுக்குள் ஒதுங்கி தற்காப்பு நிலையை எடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தற்காப்பு நிலையை வெற்றிகரமாக்க வேண்டுமாக இருந்தால் இரண்டு விடயங்கள் நடந்தாக வேண்டும். ஒன்று அரசியல் அதிகாரத்தின் பிடி தங்களிடமும் இருக்க வேண்டும்.

இரண்டாவது அரசியல் அதிகாரத்தின் மற்றைய பிடி தம்மைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரிடம் இருக்க வேண்டும். தம்மை பாதுகாக்க  ஒருவராக ராஜபக்ச~க்கள் ரணிலைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ரணிலை ராஜபக்~க்கள் பாதுகாப்பதும், ராஜபக்களை ரணில் பாதுகாப்பதும் வரலாற்று ரீதியாக நிகழ்ந்து வருகின்ற ஒன்றாகும்.

“ராஜபக்களின் காவலரே ரணில்” என்ற ஜே.வி.பி. தலைவர் அநுரவின் கூற்று முற்றிலும் உண்மையானதே இரண்டாவது இந்திய – மேற்குலகத்தரப்பின் ஒத்துழைப்பாகும்.

ராஜபக்~க்களை தற்காப்பு நிலைக்கு தள்ளவேண்டும் என்பதற்காகவே மேற்குலகம் காலி முகத்திடல் போராட்டக் காரர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.

அதிலும் இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் இடையே உடன்பாடும் இருந்தது. அரசாங்கத்தை இந்தியா பார்க்கட்டும் போராட்டக்காரர்களை மேற்குலகம் பார்க்கும் என்பதே அந்த உடன்பாடாகும்.

இந்த உடன்பாட்டில் இரண்டு தரப்புக்கள் மத்தியிலும் சீனா நுழைவதைத் தடுப்பது, எந்தத் தரப்பு வெற்றிபெற்றாலும் தமது பிடிக்குள் வைத்திருப்பது ஆகிய இரண்டு நோக்கங்களும் இருந்தன.

தற்போது, காலி முகத்திடல் போராட்டம் நீண்டு கொண்டு செல்வதை இந்தியாவும் மேற்குலகமும் விரும்பவில்லை. இதற்கு அப்போராட்டம் தங்களது கையை விட்டுப் போராட்டம் போய்விடும் என்ற அச்சமே காரணமாகும்.

இலங்கைத்தீவில் குழப்பங்கள் தொடர்ச்சியாக இருப்பது தங்களின் இந்தோ – பசுபிக் மூலோபாய நலன்களை பாதிக்கும் என்பதும் மற்றொரு காரணமாகும்.

குறிப்பாக இலங்கையின் தொடர் குழப்பம் தனது தேசிய பாதுகாப்பை பாதிக்கும் என்ற அச்சம் இந்தியாவுக்கு மேலதிகமாக இருந்தது.

இதனால் தங்களின் பிடியும் ஆட்சி அதிகாரத்தில் வலுவாக வந்ததன் பின்னர் போராட்டத்திற்கான ஆதரவை நிறுத்தவே அவை விரும்பியிருந்தன. 

தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் போராட்டத்திற்கான மேற்குலக ஆதரவும் நிறுத்தப்படலாம்.

சீனா – இந்தியப்போட்டியைப் பொறுத்த வரை ரணில் இரண்டிலிருந்தும் சமதூரத்தில் நின்று கொண்டு இரண்டையும் கையாள முயற்சிப்பார்.

இதுவொன்றே இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் போதுமானது. 

இலங்கைத் தீவில் சீனா முழுமையாக காலூன்றிய நிலையில் அதனை முழுமையாக அகற்ற முடியாது என்பது இந்தியாவிற்கும் மேற்குலகத்திற்கும் நன்றாகவே தெரியும்.

எனவே சீனா முழுமையான ஆதிக்கம் செலுத்தாமல் தங்களுக்கும் வலுவான பிடி இருக்கக்கூடிய நிலை இருப்பது தற்போதைக்கு அவர்களைப் பொறுத்தவரை போதுமானதாக உள்ளது. 

மூன்றாவது பெருந்தேசியவாதமாகும். பெருந்தேசியவாதம் நெருக்கடி காலங்களில் லிபரல் முகமூடியை அணிந்துகொண்டு பெருந்தேசியவாதத்தின் இருப்பைப் பாதுகாக்கும்.

சாதாரண காலங்களில் இனவாத முகமூடியை அணிந்து கொண்டு சக தேசிய இனங்கள் மீது ஆதிக்கத்தை செலுத்த முயற்சிக்கும். தற்போது அதற்கு நெருக்கடிக்காலம்.

இதனால் ரணில் என்கின்ற லிபரல் முகமூடியை அணிந்துகொண்டு பெருந்தேசியவாதத்தின் இருப்பைப் பாதுகாக்க முயல்கின்றது. 

காலிமுகத்திடல் போராட்டம் பெருந்தேசியவாத அரசையையே ஆட்டம் காணச் செய்துவிடும் என்ற அச்சம் காணப்பட்டது. 

போராட்டக்காரர்கள் நெருக்கடியின் ஊற்றை ஆழமாகத் தேடுவார்களாக இருந்தால் அரசின் கட்டமைப்பை மாற்றுதல் என்ற முடிவுக்கே வந்திருப்பர்.

அரசை மாற்றுதல் என்ற நிலை வந்தால் அது அனைத்து தேசிய இனங்களையும் அவற்றின் அடையாளங்களுடன் அங்கீகரித்தல் என்ற நிலையை நோக்கியே நகர்ந்திருக்கும். 

ஏற்கெனவே ஆங்காங்கு போராட்டக்காரர்களிடம் அதற்கான கூறுகள் தென்பட்டிருந்தன. பண்டாரநாயக்கா சிலையில் கண்களை மூடியமை, இசைப்பிரியா, சிவராம் போன்றவர்களின் புகைப்படங்களை காட்சிக்கு வைத்திருந்தமை என்பன அதன் வெளிப்பாடுகளே இந்த மாற்றங்களை பெருந்தேசியவாதம் விரும்பியிருக்கவில்லை.

ரணிலின் பதவியேற்பு தொடர்பில் முதலாவது வெற்றி ராஜபக்களுக்கு. இரண்டாவது வெற்றி ரணிலுக்கு. மூன்றாவது வெற்றி பெருந்தேசியவாதிகளுக்கு என்றே கூறலாம்.

தோல்வி என்ற வகையில் பார்த்தால் முதலாவது தோல்வி போராட்டக்காரர்களுக்கு. இரண்டாவது தோல்வி ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி உட்பட எதிர்க்கட்சிகளுக்கு. மூன்றாவது தோல்வி தமிழ்த் தரப்பிற்கு எனக் கொள்ளலாம். 

தமிழ்த்தரப்பு ராஜபக்களின் புதிய ஆட்சி தொடங்கிய ஆரம்பகாலம் தொடக்கம் கையாளுதலில் தவறுகளை விட்டிருந்தது.

தென்னிலங்கையின் இரண்டு அணிகளையும் கோட்பாட்டு ரீதியாக எப்படிப் பார்ப்பது என்ற அணுகுமுறைத் தவறிலிருந்தே இது ஏற்பட்டது. 

தென்னிலங்கையின் இரு அணிகளும் பெருந்தேசியவாத அணிகளே. இந்த வகையில் இரண்டு அணிகளும் தமிழ்த்தரப்பின் நண்பர்கள் அல்லர்.

இரண்டு தரப்பும் கையாளப்படவேண்டியவர்கள். இரண்டிலும் சமதூரத்தில் நின்று கொண்டு கையாளுகையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

மாறாக தமிழ்த்தரப்பு ஒரு பக்க ஆதரவு நிலையை எடுத்து சாதகமான சூழலை  குழப்பியிருந்தது.

தற்போதைய சூழல் கடந்த மைத்திரி-ரணில் ஆட்சி, ராஜபக் சதோரர்கள் ஆட்சி ஆகிய அரசியல் சூழல்களில் இருந்து மாறப்போகிறது. புதிய அரசியல் சூழல் வரப்போகிறது. வெறுமனவே புலம்பி எதுவும் நடைபெறப்போவதில்லை.

புதிய அரசியல் சூழலை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி இப்போதே யோசிப்பது நல்லது. 

சுமந்திரன் அவசரப்பட்டு ரணிலுக்கு எதிரான கருத்தை முன்வைத்து விட்டு பின்னர் மாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லை. ரணிலை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி திட்டங்களைத் தீட்டிச் செயற்படுவதே தற்போது அவசியமானது.

ரணில் அரசாங்கத்தில் சிறிய ஜனநாயக வெளி உருவாகலாம். அதனை உச்சவகையில் பயன்படுத்த தவறக் கூடாது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.