Thu. Dec 1st, 2022

நீதி வேண்டி நிற்கும் தமிழர்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம் என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) அமைப்பு தெரிவித்துள்ளது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான இன்று குறித்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) அமைப்பு வெளியிட்ட அறிக்கை வருமாறு…“சிறிலங்காவில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வெறுமனே அதிகாரவர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழலையும் பொருளாதாரக் குற்றங்களையும் மட்டுமே கையாழ்வதற்கானதாக அல்லாமல், பெரும் வன்கொடுமைக்குற்றங்களிலில் ஈடுபட்டு, தண்டனை பெறாமல் தப்பியிருப்போர் தொடர்பிலும், தமிழர்களது நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான நீண்ட போராட்டத்திற்கும் தீர்வு வழங்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என அத்தீவில் நடைபெற்றுவரும் பாரிய மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்திவரும் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் கூறியுள்ளது.

‘பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட 2009 இறுதிப்போரின் இந்தச் சோகமான ஆண்டுதினத்தை நினைவுகூரும் தமிழ் மக்களுடன் நாமும் கைகோர்த்து நிற்கின்றோம்” என அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கென அமைக்கப்பட்ட ஐ.நா. நிபுணர்குழுவின் உறுப்பினருமான யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

‘பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவந்த பாரதூரமான சர்வதேச குற்றச்செயல்களுக்கான தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் நடைமுறையானது ஊழல் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் நடைமுறைக்கு இட்டுச்சென்று, வரலாற்றின் மிக இக்கட்டான நிலைக்கு சிறிலங்காவை இன்று கொண்டுசென்றுள்ளது. இன்று சிறிலங்காவில் நிலவும் இந்த பரிதாபகரமான நிலைமைக்கு இதுவே காரணமாகும். தற்போதுள்ள தேவை நீதியும் பொறுப்புக்கூறலுமேயாகும். ஆனால் சிறிலங்கா தொடர்ச்சியாக இதனைச் செய்வதற்கு விருப்பமற்று இருந்துவந்துள்ளது. சர்வதேச சட்ட அதிகாரத்திற்குட்பட்ட வழக்குகளை ஆரம்பிப்பதையும் தடைகள் கொண்டுவருவதையும் ஏதுவாக்கத்தக்க வகையில், பெரும் வன்கொடுமைக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் ஊழல்கள் ஆகியவற்றின்மீது குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா குடிமக்களுக்கு சர்வதேச சமூகம் உதவ முன்வரவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச, 1989இல் மாத்தளை மாவட்டத்தின் இராணுவக் கட்டளையத்தளபதியாக இருந்தவேளையில் அங்கு நடந்த பெருந்தொகையானோர் காணாமற்போனதில் அவரின் வகிபாகம் தொடர்பில் இவ்வமைப்பு அண்மையில் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது.

இந்த 1989இல் நடந்த வன்முறைகக் கலவரத்தில் சாதாரண உடைகளில் பாதுகாப்புப்படை அதிகாரிகளால் நடாத்தப்பட்ட வெள்ளைவான் கடத்தல்களும், நெருப்புக் கம்பிகளால் சூடுவைத்தல் உள்ளிட்ட சித்திரவதைகளும் பெருமளவில் நடந்தன. ‘கடந்த முப்பது ஆண்டுகளில் பாதுகாப்புப் படைகள் தங்களது உத்திகளை மாற்றிக்கொள்ளவில்லை – மாறாக பாதிக்கப்படுபவர்கள்
மட்டுமே மாற்றப்பட்டுள்ளார்கள்” என சூக்கா தெரிவித்தார்.

ஜே.வி.பி காலத்தில் நடந்த படுகொலை முதல், 2009இல் நடந்த போரின் இறுதிக்கட்டம் என கடந்த காலங்களில் நடந்த குற்றங்களுக்கு அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவையும் அவரது கூட்டாளிகளையும் பொறுப்புக்கூறவைக்க வேண்டும் என இவ்வமைப்பு தொடர்ச்சியாக அழைப்புவிடுத்து வந்துள்ளது. காணாமற்போனோரின் குடும்பங்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பங்கள் தங்களுடைய சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கும் காரணமானவர்களைப் பொறுப்புக்கூறவைப்பதை எதிர்பார்ப்பதற்குமான தார்மீக உரிமையைக் கொண்டுள்ளன.

‘நாட்டின் தலைமைப்பதவியிலுள்ள அரசியல்வாதிகள் பற்றி ஒருவர் கூறக்கூடிய மிகக்கனிவான ஒரு விடயம் என்னவெனில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பெரும் அநியாயங்களுக்கு அவர்கள் பொறுப்புக்கூற தொடர்ச்சியாகத் தவறியுள்ளார்கள் என்பதே. பல சம்பவங்களில் குறிப்பாக அரசதலைவர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பெரும் மனிதஉரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்கள்” என யஸ்மின் சூக்கா கூறினார்.

‘சிறிலங்காவின் அடுத்த தலைமுறையினர் உள்ளிட்ட அதன் குடிமக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் செலவில், தங்களது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி சிறிலங்காவின் உயர்மட்ட அரசியல் வர்க்கத்தினர் ஆடும், மற்றவர் நட்டத்தில் தாம் லாபம் ஈட்டும் ஒருவகை விளையாட்டே இதுவாகும்” என அவர் மேலும் கூறினார்.


எந்தவொரு சிறிலங்கா அரசியல்வாதியும் சர்வதேச சமூகத்திடம் தொடர்பை ஏற்படுத்துவதையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதையும் நிராகரிக்கும்படியும், அவர்களுடைய முறைகேடான ஆதாயங்களை திருப்பி அனுப்புவதையும் உறுதிப்படுத்தும்படியும் சர்வதேச சமூகத்திடம் இவ்வமைப்பு வேண்டிக்கொள்கின்றது. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் செய்யக்கூடிய ஆகக்குறைந்த செயல் இதுவாகவே இருக்கும்” என தெரிவித்துள்ளது

Gallery

தகவல்

Leave a Reply

Your email address will not be published.