Fri. Dec 2nd, 2022

கபில்

 “சிங்கள மக்கள் மத்தியில் தோன்றி வரும் இந்த தலைமைத்துவ வெற்றிடம், தமிழர் தரப்புக்கு சாதகமானதாகவும் அமையலாம்” 

அலரி மாளிகையில் தொடங்கி காலிமுகத்திடல் வரை அரச ஆதரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து கொண்டிருந்த போது, ஊடக மற்றும் சிவில் செயற்பாட்டாளரான ரங்க கலன்சூரிய ருவிட்டரில் ஒரு பதிவை இட்டிருந்தார்.

“வன்முறையை நிறுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கக் கூடிய நம்பகமான நபரைப் பற்றி நாம் சிந்திக்க முடியுமா? மதம், அரசியல் அல்லது கலாசாரம்? சமூகத்தில் இவ்வளவு பெரிய நம்பிக்கை குறைவு.” என்பது தான் அதன் நேரடித் தமிழாக்கம்.

வன்முறைகளை தடுத்து நிறுத்தக் கூடிய-  அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ, கலாசார ரீதியாகவோ, செல்வாக்குச் செலுத்தக் கூடிய யாரும் இல்லை என்பதையே, அவர் கவலையுடன் குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக ஒரு சமூகத்தில், எல்லாத் தரப்பினராலும் மதிக்கப்படும் தலைவர்கள் இருப்பார்கள். அவர்களின் பேச்சுக்கு பெரும்பாலானவர்கள் கட்டுப்படும் நிலை காணப்படும்.

ஆனால், கடந்தவாரம் காலிமுகத்திடலில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அடுத்து, நாடெங்கும் கலவரங்கள் பரவிய போது, அமைதி பேணும்படி எல்லா தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஜனாதிபதி, கோட்டா உள்ளிட்டவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித், ரணில், சந்திரிகா, சுமந்திரன் உள்ளிட்டவர்களும் அமைதி பேணுமாறு மக்களிடம் கோரினார்கள்.

பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித்தும் அத்தகைய கோரிக்கையை முன்வைத்தார்.

ஆனால் யாரும் மசியவில்லை. வன்முறைகள் இரவுபகலாகத் தொடர்ந்து கொண்டிருந்தன. இந்த வன்முறைகளுக்குப் பின்னால் பல்வேறு அரசியல் சக்திகள் இருந்தன. 

அவை எல்லாமே, ராஜபக்ஷவினருக்கு – ஆளும்கட்சியினருக்கு எதிரானவையா என்பதிலும் சந்தேகங்கள் உள்ளன.

எவ்வாறாயினும், அண்மைய வன்முறைகளுக்குப் பின்னர், சிங்கள மக்கள் மத்தியில், தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று உருவாகியிருக்கிறது என்பது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

2009 மே 19 இற்குப் பின்னர், தமிழர்கள் மத்தியில் தலைமைத்துவ வெற்றிடம் தோன்றியது. அது இன்று வரை, முழுமையாக நிரப்பப்படாமலேயே இருந்து கொண்டிருக்கிறது.

தற்காலிகமாக அந்த தலைமைத்துவம் இரா.சம்பந்தனிடம் சென்றது. அவர் அதனை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று வரை தக்கவைத்துக் கொண்டாலும், அவரால், அந்த வெற்றிடத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை.

வயது முதிர்ச்சி, அரசியல் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இரா.சம்பந்தன், பெயரளவுக்கு தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தாலும், அது செயற்திறன் கொண்டதாக இருக்கிறது எனக் கூற முடியாது.

அதுபோலவே, எம்.எச்.எம். அஷ்ரப்புக்குப் பின்னர், முஸ்லிம்களுக்கும் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டது. அதனை ரவூப் ஹக்கீம் தற்காலிகமாக நிரப்ப முயன்றார். 

அவருடன், ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா என்று பலர் முஸ்லிம்களுக்கு தனித்துவமான தலைமைத்துவத்தை வழங்க முயன்றனர். எல்லோரும் தோற்றுப் போயினர். 

இப்போது முஸ்லிம் மக்களால் பரவலாக மதிக்கக் கூடிய எந்த தலைவரும் இல்லை. முஸ்லிம்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆளுமை கொண்ட தலைமைத்துவமும் இல்லை.

சிங்கள பௌத்த பேரினவாதம் மிகச் சூட்சுமாக முன்னெடுத்த திட்டங்களின் ஊடாகவே,  தமிழரின் தலைமைத்துவ ஆளுமையை இல்லாதொழிக்கப்பட்டது. முஸ்லிம்களின் தலைமைத்துவங்களையும் தலையெடுக்க விடாமல் தடுத்தது.

தமிழரின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டு, அவர்கள் மத்தியில் பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்டு, பல அணிகள் உருவாகின.

பலமாக நின்ற தமிழர்கள், இப்போது சின்னாபின்னமாக சிதறிப்போன தலைமைத்துவங்களை நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இளம் தலைவர்களை உருவாக்கும் சிந்தனையின்றி, ஆசனத்தை இறுகப் பற்றியிருக்கும், தலைவர்களைக் கொண்டதாக அது மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழர்களுக்கு நெருக்கடி ஏற்பட்ட தருணங்களில் எல்லாம், எல்லாத் தரப்பினையும் ஒன்றிணைத்து ஓரணியாக்கி, நிலைமைகளையோ, கொள்கைகளையோ வழிப்படுத்தக் கூடிய தலைமை இல்லையே என்ற ஏக்கம் அவ்வப்போது, ஏற்படுவதுண்டு.

2009இற்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் தலைமைத்துவங்களால், பரவலாக மதிக்கப்படும் ஒருவராக இருந்தவர் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை.

அவர், எல்லாத் தரப்புகளையும் ஒன்றிணைக்க முயன்றார். ஆனால் அந்த முயற்சியில் அவரும் தோற்றுப் போனார்.

அவருக்குப் பின்னர், தலைமைகளையோ சமூகத்தையோ ஒன்றிணைக்கும் பாலமாக விளங்கக் கூடிய சுயாதீன தரப்பினர் கூட இல்லாமல் போய் விட்டனர்.

இவ்வாறான தலைமைத்துவங்கள், அரசியலில் இருந்து தான் தோற்றம் பெற வேண்டும் என்றில்லை. அது சமூகத்தில் இருந்து, சமூக அமைப்புகளில் இருந்து, மத அமைப்புகளில் இருந்து, கலாசார அமைப்புகளில் இருந்து கூட தோற்றம் பெறலாம்.

ஆனால் தமிழர்கள், முஸ்லிம்களின் அத்தகைய தலைமைத்துவ வாய்ப்புகளை அருகச் செய்து, மிகப் பலமானதொரு அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் சிங்கள பௌத்த பேரினவாத நலன்களை நிறைவேற்ற முற்பட்ட சிங்களத் தரப்பில், இப்போது அதேவெற்றிடம் உருவாகியிருக்கிறது.

இன்றைய நிலையில் யாருடைய -எந்த தலைவர்களுடைய பேச்சுக்களையும் கேட்கக் கூடிய நிலை இல்லாதிருப்பது, அவர்கள் தரப்பில் மிகப் பெரியதொரு ஏமாற்றம்.

சிங்கள அரசியல் எப்போதும், செல்வாக்குமிக்க ஆளுமைகளையும் தலைமைகளையும் கொண்டதாக விளங்கி வந்திருக்கிறது.

டி.எஸ்.சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ என்று ஆளுமையும், கவர்ச்சியும் மிக்க தலைமைத்துவங்கள் தொடர்ச்சியாக இருந்து வந்தன.

சில காலங்களில் கவர்ச்சியற்ற, ஆளுமைக் குறைபாடு கொண்ட தலைமைத்துவங்கள் உருவான போதும் அவர்களால் நீடித்து நிலைத்திருக்க முடியவில்லை.

அரசியலைக் கடந்து மாதுளுவாவே சோபித தேரர் போன்ற மத ஆளுமைகளும், சமூகத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கியிருக்கிறார்கள்.

இப்போது கோட்டா, மஹிந்த, சஜித், ரணில், சந்திரிகா. அனுர என்று பல அரசியல் ஆளுமைகள் இருந்தாலும், அவர்களால், சமூகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

தங்களின் பேச்சுக்கு கட்டுப்படக் கூடியளவுக்கு அவர்களால் சமூகத்தின் மீது ஆளுமையைச் செலுத்த முடியாதிருக்கிறது.

இதுதான், தலைமைத்துவ இடைவெளி. பெயருக்கு கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும், அவர்கள் பரவலாக எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இல்லை.

அவ்வாறானவர்கள் இருந்திருந்தால், வன்முறைகள் துரிதமாக கட்டுக்குள் வந்திருக்க வேண்டும்.  

அடுத்த கட்டம் பற்றிய ஆக்கபூர்வமான பேச்சுக்கள் தொடக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவையெதுவும் முன்னெடுக்கப்படவில்லை. மக்களை வெறுப்பூட்டும், நிலையே நீடித்தது.

சிங்கள மக்கள் மத்தியில் தோன்றி வரும் இந்த தலைமைத்துவ வெற்றிடம், தமிழர் தரப்புக்கு சாதகமானதாகவும் அமையலாம். ஆளுமை கொண்ட தலைமைத்துவங்களால் துணிச்சலுடன் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை, எடுக்க முடியாத நிலையும் தோன்றலாம்.

எவ்வாறாயினும், தமிழர், முஸ்லிம்களின் தனி ஆளுமைகளை இல்லாதொழித்தோ, பலத்தை சிதைத்தோ கொண்டாட்டங்களை நடத்தியவர்களே, இன்று வீதிக்குத் துரத்தப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அவர்கள் தங்களைத் தாங்களே தலைவர்களாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது தான் தெரிகிறது அவர்களுக்கே தெரிகிறது; தாங்கள் எங்கே நிற்கிறோம் என்ற விடயம்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.