Wed. Dec 7th, 2022

(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)

இன அழிப்பிற்கு காரணமானவர்கள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும். தூக்கிலிடப்பட வேண்டும். தமிழர் இன  அழிப்பிற்காக கால்கோளிட்ட ரணில் விக்கிரமசிங்க சமாதான ஒப்பந்தத்தின் ஊடாக விடுதலை புலிகள் அமைப்பை பலவீனப்படுத்தி, இராணுவத்தை பலப்படுத்தி இராணு தீர்வினை நோக்கி சென்றார். 

TamilNet

ஒற்றையாட்சி அரசியலமைப்பினை மாற்றி தமிழ் தேசியத்தை அங்கிகரிக்கும் கட்டமைப்பு உருவாக்கப்படாவிடின் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கஜேந்திர குமார் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் (17) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழர்களது வாழ்வில் மறக்க முடியாத மாதமாக இம்மாதம் காணப்படுகிறது.

தமிழ் தேசத்தின் மீது சிங்கள பௌத்த பேரினவாதிகள் நடத்திய இன அழிப்பின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் அழிக்கப்பட்டார்கள்.

2009.மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் நிறைவடைந்த போது சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும்,தற்போதைய பிரதமர் கோட்டபய ராஜபக்ஷபாதுகாப்பு  செயலாளராகவும் ,பாராளுமன்ற  உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்து நடத்திய யுத்தத்தில் அழிக்கப்பட்டுள்ளார்கள்.

அவ்வாறு அழிக்கப்பட்ட உறவுகளுக்கான தலை கூர்ந்து நினைவு கூறுகிறேன்.பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்ற அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமான முறையில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டனர்.

இராணுவத்தினரால் அப்பாவி மக்கள் கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள்.

இசைப்பிரியா போன்றோர் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் இராணுவத்தினரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்.

பாலசந்திரன் போன்ற குழந்தைகள் இராணுவத்தினரது பாதுகாப்பில் இருந்த நிலையில் கொல்லப்பட்டுள்ளார்கள்.உணவு மற்றும் மருந்து தடை இன அழிப்பிற்கான ஆயுதமாக மேற்கொள்ளபட்டுள்ளது.

கஞ்சிக்காக வரிசையில் காத்திருந்த அப்பாவி தமிழ் மக்கள் மீதும் மனசாட்சியற்ற வகையில் வான்வழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன அழிப்பிற்கு உள்ளான எமது உறவுகளை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் இன்று விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும்,குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்பது எனது பிரதான கோரிக்கையாக உள்ளது.எமது கோரிக்கைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளர்.

இன அழிப்பிற்கான கால்கோளாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருந்தார் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

எமது தேசத்தின் மீது ஸ்ரீ லங்கா அரசு இராணுவ தீர்வை முன்வைத்து யுத்த்தை நடத்திக் கொண்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சுதந்திர தேவதையாக வேடமிட்டு  1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது யாழ்ப்பாணத்தில்  இருந்து சுமார் 5 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தார்கள்.

அதன் பின்னர் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது தமிழீi விடுதலை புலிகளில் எதிர் நடவடிக்கைகள் காரணமாக இராணுவ சமனிலை உருவானது.

அதன் விளைவாக 2002ஆம் ஆண்டு பொன்னான வாய்ப்பு ஒன்று புலிகள் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது.

அரசாங்கத்தி ற்கும்,விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இடையில் சமாதான உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டது.

1948ஆம ஆண்டு முதல் காணப்பட்ட இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

எமது தேசியத்தின் தலைவர் பிரபாகரனுக்கும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிங்கும் இடையில் அந்த சமாதான ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தாமல் சர்வதேச சக்திகளுடன் இணைந்து சதி செய்து கருணா அம்மாணை விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்து விடுதலை புலிகளை சர்வதேச மட்டத்தில் தடை செய்யவும்,பலவீனப்படுத்தவும்,அதன் பின்னர் இராணுவத்தினரை கட்டியெழுப்பி மீண்டும்  இராணுவ தீர்வை நோக்கி செல்வதற்கான கால்கோளிட்டவர் ராஜபக்ஷர்களுக்காக வேலைக்கமர்த்தப்பட்ட பிரதமர் ரணில் விக்கரமசிங்க என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

இவர் நேர்மையற்றவர்.தமிழரது  பொக்கிஷமான கருதப்பட்ட யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.

ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சி காலத்தில் தமிழர் மீது வன்முறை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

சொத்துக்கள் சூறையாடப்பட்டன.இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பினை மாற்றியமைத்து தமிழ் தேசியத்தை அங்கிகரிக்கும் ஒரு அணுமுறையை எடுக்காவிடின் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என்றார்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.