Fri. Dec 2nd, 2022

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு , ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு கருதி உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

இம்மாவட்டத்தில் 13 பிரதேச செயலகப்பிரிவுகளில் 585 குடும்பங்களைச் சேர்ந்த 2290 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள எச்சரிக்கை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் 3 தற்காலிக முகாம்களிலும் , 373 குடும்பங்களைச் சேர்ந்த 1362 பேர் உறவினர்களது வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று களுத்துறை மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் பலத்த காற்றினால் 16 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 82 வீடுகள் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் காரணமாக குறித்த இரு மாவட்டங்களிலும் பல வீதிகளினூடான போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கமைய இரத்தினபுரி – பாணந்துரை வீதி, கிரிஎல்ல – இடம்கொட வீதி, கலவானை – மத்துகம வீதி, இரத்தினபுரி – அலபான வீதி, களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை – அகலவத்தை வீதி, புளத்சிங்கள – பரகொட வீதி என்பவை வெள்ள நீரில் மூழ்கின.

இதே வேளை நேற்று காலை 6 மணி வரை இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியது. இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை பிரதேசத்தில் 119.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதே போன்று மாத்தறை – பிட்டபெத்த பிரதேசத்தில் 77 மில்லி மீற்றர் மழை வீழச்சியும், கேகாலை – அரநாயக்க பகுதியில் 70 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியான மழை பெய்யும் பெய்யும் பட்சத்தில் களு கங்கை, கின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றில் நீர் மட்டங்கள் உயர்வடையக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓரிரு தினங்களுக்கு மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் , மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை தொடரக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.