Fri. Dec 2nd, 2022

 “ஒவ்வொரு கால கட்டத்திலும் எல்லோரும் அவரவர் சக்திக்கு மீறி எனது விடுதலைக்காக உழைத்துள்ளனர்.நேரடியாக அவர்களை சந்தித்து நன்றி சொல்லவேண்டும்” அத்துடன் இனிதான் நான் கொஞ்சம் காற்றை  சுவாசிக்க வேண்டும் என தெரிவித்தார் பேரறிவாளன்.


30 ஆண்டு கால சிறை வாழ்க்கைக்கு பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,

“இனிதான் கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும்” -பேரறிவாளன் உருக்கம்

“‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்” என்பது குறள். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதையும், நல்லவர்கள் வீழ்த்தப்படுவதையும் இந்த உலகம் நினைத்து பார்க்கும் என்பது இந்த குறளின் பொருள்.

‘செவ்வியான் கேடு’ தான் என் சிறை வாழ்க்கை.

தமிழ்நாடு மக்கள் என் மீது அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக என்னை நினைத்தார்கள். என் விடுதலையின் மூலகாரணம் என் அம்மா. என் அம்மாவின் தியாகம், அவரின் போராட்டம் தான் இதற்கு காரணம்.

ஆரம்ப காலங்களில் நிறைய அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் அம்மா சந்தித்துள்ளார். நிறைய வேதனை, வலிகளை சந்தித்துள்ளார். அதையெல்லாம் கடந்து 31 ஆண்டுகள் இடைவிடாமல் போராடியுள்ளார்.

இதற்கு காரணம் எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம். அதுதான் எங்களுக்கு வலிமையை கொடுத்தது.

“இனிதான் கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும்” -பேரறிவாளன் உருக்கம்

மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை நான் நான்கு முறை படித்திருக்கிறேன். சிறுவயதிலும் சிறைப்பட்ட போதும், தூக்கு தண்டனை வழங்கியபோதும் படித்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் அது ஒவ்வொரு உணர்வை தந்திருக்கிறது. ஒரு காலகட்டத்திற்கு பிறகுதான் அதனுடன் என் அம்மாவை நான் ஒப்பிட ஆரம்பித்தேன். இதனை நான் அம்மாவிடம் சொல்லியதில்லை. ஏனெனில், எங்களுக்குள்ளான இயல்பான உணர்வு போய்விடக் கூடாது என நினைத்தேன். இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.அம்மா மட்டுமல்லாமல், அப்பா, என் இரு சகோதரிகள், அவர்களுடைய கணவர்களும் காட்டிய அன்பும், பாசமும் தான் இவ்வளவு தூரம் என்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.இவ்வழக்கில் வீழ்ச்சியை சந்திக்கும் போதெல்லாம் நான் என் அம்மாவை காண்பதற்கு அஞ்சுவேன்.

அம்மாவும், என் தந்தையும் உயிருடன் இருக்கும்போதே நான் விடுதலை செய்யப்பட வேண்டும், நியாயம் வெல்ல வேண்டும் என நினைத்திருக்கிறேன்.


ஒவ்வொரு காலகட்டத்திலும் எல்லோரும் அவரவர்கள் சக்திக்குமீறி இதற்காக உழைத்துள்ளனர். நேரடியாக அவர்களை சந்தித்து நன்றி செலுத்த வேண்டும்.


“செங்கொடியின் தியாகம் அளப்பரியது”


இந்த வழக்கில் தலைவர்கள், மக்களின் ஆதரவை உருவாக்கியது செங்கொடியின் தியாகம்.

என் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துவிட்டேன் என 2013-இல் வாக்குமூலமாக அளித்தவர் சிபிஐ அதிகாரி தியாகராஜன். இது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் ஆகியோரின் குரல்களும் வலுப்படுத்தின. மூத்த நீதிபதியாக இருந்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்தவர் கிருஷ்ணய்யர். அதுவும் என் விடுதலைக்குக் காரணம். எனக்காக அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில் மண்டியிட்டு கேட்டுக்கொள்வதாக கூறியிருந்தார்.

“இனிதான் கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும்” -பேரறிவாளன் உருக்கம்

நான் நினைத்துக்கூட பார்க்க முடியாத மூத்த வழக்கறிஞர்கள் இதற்காக போராடினர்.

ஏறக்குறைய 6 ஆண்டுகளாக எவ்வித கட்டணத்தையும் எதிர்பார்க்காமல் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் எனக்காக வாதாடினார்.


அதுபோலவே தமிழ்நாடு அரசு தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்கள். மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதியை வைத்து வாதாடினார்கள்.


“இனிதான் காற்றை சுவாசிக்க வேண்டும்”


ஊடகங்கள் இல்லையென்றால் இந்த உண்மை வெளிவந்திருக்காது. காவல்துறையை சேர்ந்தவர்களும் என் மீது அன்பு பாராட்டினார்கள்.

31 ஆண்டுகளாக இந்த சட்டப் போராட்டம் தான் மனதில் இருந்தது. இனிதான் நான் காற்றை சுவாசிக்க வேண்டும், கொஞ்சம் மூச்சுவிட வேண்டும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.


எதிர்காலம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, குடும்பத்தினரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்.

“இனிதான் கொஞ்சம் காற்றை சுவாசிக்க வேண்டும்” -பேரறிவாளன் உருக்கம்

மரண தண்டனை வேண்டாம் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை உள்ளவன், அதனை கருணை அடிப்படையில் சொல்லவில்லை, நீதிபதிகளே கூறியுள்ளனர்.

தீர்ப்பை நான் இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு தீர்ப்பு குறித்து கருத்து சொல்கிறேன்.

31 ஆண்டுகால அனுபவமும் ஒரு பாடம் தான்” என தெரிவித்தார்.

விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தகவல்

Leave a Reply

Your email address will not be published.